தமிழ் நாவல்கள்
|
பல்வேறு மொழிகளில் நாவல்களின் தோற்றம் நிகழ்ந்த காலச் சூழலில் ஆங்கிலக் கல்வி கற்ற தமிழ்ப் படைப்பாளிகள் நாவல் துறையில் ஈடுபட விரும்பினர். மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளை இம்முயற்சியில் முதலில் ஈடுபட்டார். அவர் 1879இல் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம், 1887இல் எழுதிய சுகுண சுந்தரி சரித்திரம் என்னும் இரண்டு நாவல்களும் மிகப் புகழ் பெற்றன. தமிழிலக்கியத்தில் உரைநடை வகையைப் பின்பற்றிப் புதிய துறையாகிய நாவல் துறைக்குத் தொடக்கம் செய்தார். வேதநாயகம் பிள்ளை தம்முடைய படைப்பை வசன காவியம் (Prosaic
Epic) எனக்
கூறினார்.
பிரதாப
முதலியார்
சரித்திரத்தில் கதைமாந்தர் வாயிலாக வசன காவியத்தின் சிறப்புகளைக் கூறுகிறார். வசன காவியம் என்று கூறப்படுகின்ற நாவலின் மூலமாகவே மக்களைத் திருத்த முடியும் என்றும், செய்யுட்களின் வாயிலாக இயலாது என்றும் கூறுகிறார்.
தமிழ் நாவல்கள் - நேற்றும் இன்றும்
|
தொடக்க காலத்தில் தமிழில் தோன்றிய நாவல்களைப் பற்றியும், இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய நாவல்கள் பற்றியும் தற்கால நாவல்கள் பற்றியும் அறியலாம்.
வேதநாயகம் பிள்ளையை அடுத்து நடேச சாஸ்திரியார் கோமளம் குமரியானது என்ற நாவலை எழுதினார். கோமளம் குமரியானது அற்புத நவிற்சிக் கதையாகும். நடப்பியலை நாவலாக எழுதத் தமிழில் முதன் முதலில் முயன்றவர் ராஜம் அய்யர். இவர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் மிகவும் புகழ் பெற்றது. விவேக சிந்தாமணியில் தொடர்கதையாக வெளிவந்தது. 19ஆம் நூற்றாண்டில் தமிழக மக்களின் வாழ்வியற் சூழலை இந்நாவல் பதிவு செய்துள்ளது. சிற்றூர் வாழ்க்கையும், மாடு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியும் விளக்கப்பட்டுள்ளன.
ராஜம் ஐயரை அடுத்து அ.மாதவய்யா எழுதிய பத்மாவதி சரித்திரம் மிகத் தொன்மையான கதைமாந்தர் படைப்பைக் கொண்டது. அந்நாவலில் அவரின் சமூகச் சீர்திருத்த எண்ணங்கள் வெளிப்படு கின்றன. அ.மாதவய்யா விஜய மார்த்தாண்டம், முத்து மீனாட்சி என்னும் நாவல்களையும் எழுதியுள்ளார். விஜய மார்த்தாண்டம் மறவர் சமுதாய வாழ்க்கையை வெளிப்படுத்துவது. முத்து மீனாட்சி ஓர் இளம் விதவையின் துன்பத்தை வெளிப்படுத்திய நாவலாகும்.
அ.மாதவய்யாவிற்குப் பிறகு தமிழ் நாவல் துறை வேறுவழியில் போகத் தொடங்கியது. பல வெளிநாட்டுத் துப்பறியும் நாவல்களைப் படித்து அவற்றைப் போலவே தமிழில் எழுத விழைந்த நாவலாசிரியர்கள் தோன்றினர். வடுவூர் துரைசாமி அய்யங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், கோதை நாயகி அம்மையார், ஜே.ஆர்.ரங்கராஜு போன்றோர்
இத்தகு
முயற்சியில்
ஈடுபட்டு
வெற்றி
பெற்றனர்.
3.1 கதைக்கரு
|
நாவலின் முதற்கூறு கதைக் கருவாகும். இதனை ஆங்கிலத்தில் Theme,
Concept என்ற
சொற்களால்
அழைக்கின்றனர்.
இலக்கியச்
சொற்களின்
கலைக்களஞ்சியம்
(Encyclopedia of Literary Terms) என்ற நூல் கதைக்கருவை ஐந்து வகையாகப் பிரிக்கிறது.
(1)
|
பருப்பொருள் கரு - Phenomenolistic Concept
|
(2)
|
தனிமனிதச் சிந்தனைக் கரு - (Individualist Concept)
|
(3)
|
சமூகக் கரு - (Sociological Concept)
|
(4)
|
உளவியல் கரு - (Psychological Concept)
|
(5)
|
தெய்விகக் கரு - (Theological Concept)
|
இவற்றில் தனிமனிதச் சிந்தனைக் கரு, சமூகக் கரு, உளவியல் கரு, தெய்விகக் கரு ஆகியவற்றையே பெரும்பாலும் தமிழ் நாவல்கள் கொண்டிருக்கின்றன.
தனி மனிதனைச் சுற்றி, அவன் செயல்பாடுகளைச் சுற்றி நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் நாவல்கள் தனிமனிதச் சிந்தனைக் கரு உடைய நாவல்களாகும். தமிழில் க.நா.சுப்பிரமணியன் எழுதிய ஒருநாள் என்ற நாவல் ஒரு தனிமனிதனின் ஒரு நாள் செயல்பாடுகளை முழுமையாக விவரிக்கின்றது. இந்த நாவல் தனிமனிதச் சிந்தனைக் கரு உடைய நாவலாகும்.
சமூகக் கரு என்பது நாவல் தோன்றிய காலச் சூழலில் அமையும் மனிதனைப் பற்றிப் பேசும். கு.சின்னப்ப பாரதியின் சங்கம் என்ற நாவல் மலைவாழ் மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. சுதந்திரம் பெற்ற இந்தியாவில் அடிப்படை அறிவும், வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் இல்லாத மக்களின் சமூக வாழ்க்கையை முழுமையாகச் சுட்டுகிறது. இந்நாவலைச் சமூகக் கருவைக் கொண்ட நாவலாக நாம் கருதலாம்.
உளவியல் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்கள் உளவியல் கரு உடையனவாக அமைவன. எம்.வி.வெங்கட்ராம் எழுதிய காதுகள் என்ற நாவல் மகாலிங்கம் என்ற ஒரு தனிமனிதனின் உளவியல் நிலையை முழுமையாக எடுத்துக் காட்டுகிறது.
தெய்விகக் கரு என்பது ஆன்மிகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டது. எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இருட்டு என்ற நாவல் ஆன்மிகப் பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு தெய்விகக் கருவால் எழுதப்பட்ட நாவல் எனக் கருதலாம்.
கதைப்பின்னல்
|
கதைக்கோப்பு என்றும் கதைப்பின்னல் என்றும் இதனைக் கூறலாம். நாவலில் கதை பின்னப்படும் தன்மையில் இருந்துதான் நாவலின் வெற்றி முடிவு செய்யப்படுகிறது. கதை மிகச் சரியாகப் பின்னப்பட்டுவிட்டால் நிலைத்து நிற்கும் நாவலாக விளங்கும். ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி ‘Plot’ என்ற சொல்லுக்கு நாடகம், கவிதை, நாவல் ஆகியவற்றிற்கான திட்டம் என்று கூறும். எனவே கதைத் திட்டம்தான் கதைக் கோப்பாக, கதைப் பின்னலாக அமைகிறது.
நாவலில், பல்வேறு கதை நிகழ்ச்சிகளை நாவலாசிரியர் குறிப்பிடுவார். இக்கதை நிகழ்ச்சிகளைக் காரண காரிய முறையில் ஒன்றினை அடுத்து ஒன்றை வைப்பது கதைப் பின்னலாகும். இந்த நிகழ்வுக்குப் பின், இது நிகழும் என்றும், இன்ன காரணத்தால் இந்த நிகழ்ச்சிக்குப்பின் இந்த நிகழ்ச்சி வைக்கப்பட்டுள்ளது என்றும் முறைப்படுமாறு அமைக்க வேண்டும். ஒரு கதை நிகழ்வைப் படிக்கும் வாசகனுக்கு அடுத்து என்ன நிகழப் போகிறது என்ற ஆர்வத்தைத் தூண்டுமாறு நிகழ்ச்சிகள் தொடர்புடன் அமைய வேண்டும். நாவலின் கதை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் சுவையாக அமைய வேண்டும். அப்போதுதான் அடுத்த நிகழ்ச்சி என்னவாக இருக்கும் என்ற சிந்தனையை உருவாக்க முடியும். இரு நிகழ்ச்சிகள் தொடர்புடையன ஆவதற்குரிய காரணமாக அமைவது கதைப்பின்னலாம்.
கதைப்பின்னல் இரு வகையாகப் பிரிக்கப்படும்.
(1)
|
நெகிழ்ச்சிக் கதைப் பின்னல் (Loose Plot)
|
(2)
|
செறிவான கதைப் பின்னல் (Organic Plot)
|
நெகிழ்ச்சிக் கதைப் பின்னலில் நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பற்று இருக்கும். கதைப்பின்னல்கள் காரண, காரிய முறைப்படி அமையாமல் நெகிழ்வாக அமையும். கதை நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு பாத்திரம் வேறொன்றை நினைத்து அதற்கேற்றவாறு செயல்படுவதாக அமையும். மு.வரதராசனாரின் நாவல்களான செந்தாமரை, கரித்துண்டு போன்ற நாவல்கள் நெகிழ்ச்சிக் கதைப்பின்னலைக் கொண்டவை.
செந்தாமரை மு.வரதராசனாரின் முதல் நாவல். இதில் ஓரு பாத்திரமாவது முழுமையானதாகப் படைக்கப்படவில்லை. சிலர் காதலை வளர்த்து வாழ்கிறார்கள்; சிலர் காத்திருந்து பெறுகிறார்கள்; சிலர் ஆராய்ந்து தேடி அடைகிறார்கள். செந்தாமரை நாவல் இத்தகைய மூன்று காதல் வாழ்வுகளையே சித்திரிக்கிறது. மருதப்பனும், அவனுடைய மனைவியும் காதலை வளர்த்து வாழ்கிறார்கள். திருநாதனும் திலகமும் காத்திருந்து காதலைப் பெறுகிறார்கள். இளங்கோவும், செந்தாமரையும் ஆராய்ந்து தேடி, காதல் வாழ்க்கை வாழ்கிறார்கள்.
கதைமாந்தர் மாறி மாறிப் பேசுவது போல் செந்தாமரை நாவல் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனால்
கதை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருக்கையில் திடீரென்று இன்னொரு பாத்திரம் பேசுவது போல் கதை மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.
எனவே
கதை ஓட்டம் நெகிழ்ச்சி அடைகிறது.
மு.வரதராசனாரின் மற்றொரு நாவல் கரித்துண்டு. இந்நாவலின் கதைத் தலைவர் ஓவியர் மோகன்; கதைத் தலைவி நிர்மலா. இவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றனர். மோகன் விபத்துக்கு உள்ளாகவே கணவன் மனைவி இருவரும் பிரிகின்றனர். நிர்மலா பம்பாய் சென்று கமலக்கண்ணன் என்பவரைச் சந்திக்கிறாள். அவரோடு சேர்ந்து வாழ்கிறாள். சென்னை வரும்போது தன் கணவன் மோகனைக் காண நேரிடுகிறது. கமலக்கண்ணனை விட்டுப் பிரிகிறாள்.
சென்னையில் ஓவியர் மோகன் முடவராய் வாழ்கிறார். வண்ணப் பொடிகளாலும், ஓவியக் கோலாலும் ஓவியம் தீட்டிய மோகன், கடைசியில் கரித்துண்டால் ஓவியம் தீட்டும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். சின்னக் குடிசையில் ஏழைப் பொன்னியுடன் வாழ்க்கை நடத்துகிறார். அவரிடம் இருந்த படிப்பின் செருக்கு மறைகின்றது.
கதைத் தலைவன் மோகன் ஓவியம் தீட்டுவதில் இருந்து தொடங்கிப் பின்னர்த் தன் வாயாலேயே தன் கதையைக் கூறி வருவதாகக் கதை செல்கிறது. இதில் அமையும் நிகழ்ச்சிகள், இடையில் தொடங்கி, பின்னோக்கிச் சென்று மீண்டும் முன்னோக்கிச் செல்கின்றன. மேலும் இடையிடையே அறிவுரைகளும் மு.வரதராசனாரால் கூறப்படுகின்றன. இவ்வாறு கதை ஓட்டம் தடைப்பட்டு தடைப்பட்டு நெகிழ்வடைந்து மாறி மாறிச் செல்கின்றது. எனவே இந்நாவலும் நெகிழ்ச்சிக் கதைப் பின்னலுக்குச் சான்றாகின்றது.
கட்டுக்கோப்புடன் விளங்கி, காரணகாரியத் தொடர்புடன் முழுமையான தன்மை உடையது செறிவான கதைப் பின்னலாகும். நாடக முறையில் விறுவிறுப்புடன் அமைந்த நாவல்களில் செறிவுக் கதைப் பின்னல்களைக் காணலாம்.
செறிவுக் கதைப்பின்னலில் கதை ஒரே தொடர்ச்சியாக அமையும். ஒன்றற்கு ஒன்று தொடர்புடையதாகவும், ஒன்றில் இருந்து ஏதேனும் ஒரு பகுதி கிளைத்துத் தோன்றியது போலவும் தோன்றும். இந்த நிகழ்வு, இவ்விடத்தில் இல்லையென்றால் கதை சிறக்காது என்று வாசகன் சொல்லுகின்ற அளவிற்குப் பிரிக்க முடியாத நிலையில் நிகழ்ச்சிகள் அமைந்திருக்கும். ஒரு நிகழ்ச்சியின் முடிவு அடுத்த நிகழ்ச்சியின் தொடக்கமாக அமையும். ஜெயகாந்தன், எம்.வி. வெங்கட்ராம் போன்றோரின் நாவல்களில் செறிவுக் கதைப்பின்னலைக் காணலாம்.
ஜெயகாந்தன் அறுபதுகளில் எழுதிய அக்கினிப்பிரவேசம் என்னும் சிறுகதையின் தொடர்ச்சியாக வந்தது, சில நேரங்களில் சில மனிதர்கள் என்னும் நாவல்; அதன் தொடர்ச்சியாக வந்தது, கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலாகும்.
கல்லூரி வாயிலில் மழைக்கு ஒதுங்கிப் பேருந்துக்குக் காத்து நின்ற கங்கா, காரில் அழைத்துச் சென்றவனிடம் ஏமாந்து தன் கற்பைப் பறிகொடுக்கிறாள். தன் அம்மாவிடம் வந்து அழுகிறாள். அம்மா, அவள் தலையில் தண்ணீரை ஊற்றி, உடலும் உள்ளமும் தூய்மையாகி விட்டதாகக் கூறுவதோடு அக்கினிப் பிரவேசம் சிறுகதை முடிக்கப் பெறுகிறது. பின்னால், இக்கதை தன்னிடம் வந்து அழுத பெண்ணைத் தாயே அடித்துத் திட்டி, ஊரைக் கூட்டி ஒப்பாரி வைத்துச் செய்தியை வெளியே பரப்பிவிட, கங்காவின் வாழ்க்கைப் பயணம் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற தலைப்பில் நாவல் ஆக்கப்பட்டது. கங்கா தன்னைக் கெடுத்த பிரபுவைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள். ஆனால் அவன் மணமாகிக் குடும்பத்துடன் வாழ்கிறான். கங்காவிற்கு நேர்ந்த களங்கத்திற்குத் தான் காரணமான குற்றத்திற்காக, பிரபு வருந்துகிறான். அவளுடன் நட்புடன் பழகுகிறான். இந்தப் புதிய உறவு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
எனவே பிரபு அவளுக்குத் திருமணம் நடந்தால் நல்லது என நினைக்கிறான். அவளை விட்டு விலகிச் செல்கிறான். ஆனால் திருமணத்திற்கு உடன்படாமல் தனிமையில் நிற்கும் கங்கா குடிப்பழக்கத்திற்கு ஆட்படுகிறாள். சில நேரங்களில் சில மனிதர்கள் நாவல் இத்துடன் முடிவடைந்தாலும், கங்கா இதற்குப் பிறகு என்ன ஆனாள் என வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக கங்கை எங்கே போகிறாள்?
என்ற
நாவல்
எழுதப்பட்டது.
இந்த இரு நாவல்களிலும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவும் அடுத்த நிகழ்ச்சி தொடங்குவதற்குக் காரணமாக அமைகின்றன. செறிவுக் கதைப் பின்னலுக்கு இது சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்
எம்.வி.வெங்கட்ராமின் காதுகள் என்ற நாவலில் கதைத்தலைவன் மகாலிங்கம்.
மகாலிங்கத்தின்
காதுகளில்
ஒரு விசித்திரமான பிரச்சனை. இரு காதுகளிலும் இரண்டு பேர் அமர்ந்து கொண்டு பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. இதனால் அவனால் எதிலும் முழுமையாக ஈடுபட முடியவில்லை. பொருளாதாரச் சிக்கல் ஏற்படுகிறது. அடுத்தடுத்துத் துன்பங்கள் என இந்நிகழ்ச்சிகள் வரிசையாகச் செறிவான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்நாவலும் செறிவான கதைப் பின்னலுக்குச் சான்றாகும்.
3.3 பாத்திரப் படைப்பு
|
தனி மனிதப் பண்புகளையோ, அப்பண்புகளின் அடிப்படையில் அவர்கள் செய்யும் செயல்களையோ நாவல் தன் கதையில் பயன்படுத்திக் கொள்ளும். நாவலில் வருகின்ற தனித்தனி மனிதனின் பண்புகளையும், செயல்பாடுகளையும் நாவலாசிரியர் பாத்திரப் படைப்பு மூலம் வெளிக்கொண்டு வருகிறார். பாத்திரங்கள்தாம் கதையை நடத்திச் செல்லுகின்றன. பாத்திரங்களின் வாழ்க்கையை முழுமையாகவோ, அதில் சுவையான ஒரு பகுதியையோ விளக்கமாக
எடுத்து
உரைப்பதுதான்
நாவலின்
பணியாகும்.
ஆங்கிலத்தில்
இதனை
Characterization எனக்
கூறுவர்.
நாவல் சிறப்பதற்கு நல்ல முறையில் பாத்திரங்கள் அமைய வேண்டும். கதையின் உயிரோட்டம் பாத்திரங்களே ஆகும். பாத்திரங்கள் மூலம்தான் நாவலாசிரியர் வாசகனைக் கவருகிறார். சில நேரங்களில் நாவலைப் படித்து முடித்ததும், சில பாத்திரங்களை விட்டுப் பிரிவது மனத்திற்குத் துன்பம் தரும் நிகழ்வாகக் கூட இருக்கும்.
கல்கியின் சிவகாமியின் சபதத்தில் வரும் சிவகாமி, தி.ஜானகிராமனின் மோகமுள்ளில் வரும் யமுனா, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் கங்கா போன்றவர்களை வாசகர்கள் மறக்க இயலாது.
பாத்திரத்தின் பண்பினை வாசகர்கள் அறிந்துகொள்ளப் படைப்பாளிகள் பயன்படுத்தும் உத்திகள் பலவாகும். அவற்றுள் சிலவாக ஆய்வாளர்கள் கூறுவன கீழ்க்கண்டவை ஆகும்.
(1)
|
புறத்தோற்றம்
|
(2)
|
அசைவு, நடை, நடத்தை, பழக்கம்
|
(3)
|
பிற பாத்திரங்களுடன் கொள்ளும் உறவு
|
(4)
|
பிறருடன் பேசும் உரையாடல்
|
(5)
|
செயல்பாடுகளும், பிறருடன் நடந்து கொள்ளும் முறைகளும்
|
(6)
|
பாத்திரத்தின் பெயர்
|
பாத்திரங்களின் பண்பினை நாவலாசிரியர் சில இடங்களில் தாமே வெளிப்படுத்துவார்.
சில இடங்களில் பாத்திரங்களின் பேச்சாலும் செயலாலும் வெளிப்படுத்தப்படும்.
கல்கியின் சிவகாமி, நரசிம்மவர்மனின் வாதாபிப் போருக்கே ஒரு காரணமாகவும், அவன் வெற்றிக்கு அடிப்படையாகவும் இருக்கிறாள். கல்கி, தாம் எழுதிய நாவல்களின் பாத்திரங்களில் சிலரின் மேல் பேரன்பு கொண்டிருந்தார் என்பதைச் சிவகாமி சபதம் முன்னுரையின் மூலம் நாம் அறியலாம்.
‘மகேந்திரரும், மாமல்லரும், ஆயனரும், சிவகாமியும், பரஞ்சோதியும், பார்த்திபனும், விக்ரமனும், குந்தவையும் மற்றும் பல கதா பாத்திரங்களும் என் நெஞ்சில் இருந்து கீழிறங்கி, ‘போய் வருகிறோம்’ என்று அருமையோடு சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்றார்கள்.’
|
இதனைக்
கொண்டு
நாம்
பார்க்கும்
போது
படைத்தவரான
கல்கியாலேயே
மறக்க
முடியாத
பாத்திரமாகச்
சிவகாமி
இருப்பதை
உணரலாம்.
தி. ஜானகிராமனின் மோகமுள்ளில் வருகின்ற யமுனா தன்னை மணந்துகொள்ள வருகின்ற இளைஞர்கள் சாதியத்தாக்கத்தால் மறுத்துச் செல்கின்ற நேரத்திலும், அதனைப் பற்றிக் கொஞ்சமும் வருந்தாமல் சமூகத்தைக் கவனித்து வருகிறாள். பாபுவின் மீது அவளுக்குக் காதல் உண்டா, நட்பு மட்டும்தானா என்பது தொடக்கத்தில் புலப்படவில்லை. பாபு மட்டுமே அவள் மேல் ஒருதலையாகக் காதல் கொண்டுள்ளானா என்றும் அறிய முடியவில்லை. நாவலின் முடிவில் பாபுவிற்குத் தன்னை அர்ப்பணித்த பிறகு அவள் பாபுவை நோக்கி ஒரு வினா எழுப்புகிறாள்.
‘திருப்திதானே?’
இந்த வினா, யமுனாவின் பாத்திரப்படைப்பைப் பற்றிய மதிப்பை மிகவும் உயர்த்திவிடுகிறது. யமுனா மறக்க முடியாத பாத்திரமாகிறாள்.
அதே போல் சில நேரங்களில் சில மனிதர்களில் வரும் ‘கங்கா’ நாம் முன்னர்க் கண்டது போல் மறக்க இயலாப் பாத்திரமாகக் காட்சியளிக்கிறாள்.
நாவலில் இடம் பெறும் பாத்திரங்களின் வகைகளை மேலை நாட்டு ஆய்வாளர்கள் இருவகையாகப் பகுப்பர்.
(1)
|
வளர்ச்சி பெறாப் பாத்திரம் (Flat Character) அல்லது ஒரு நிலை மாந்தர்.
|
(2)
|
வளர்ச்சி பெறும் பாத்திரம் (Round Character) அல்லது முழுநிலை மாந்தர்.
|
வளர்ச்சி பெறாப் பாத்திரப்படைப்பு
|
வளர்ச்சி பெறாப் பாத்திரம் என்று மொழி பெயர்த்தாலும் ஒரு நிலை மாந்தர் என்றும் மொழி பெயர்ப்பர். நாவலின் தொடக்கத்தில் எந்த ஒரு பண்புடன் காணப்படுகிறாரோ, நாவல் முடியும் வரை அதே பண்போடு விளங்குபவரே ஒரு நிலை மாந்தராவர். இப்பாத்திரம் ஒரு கருத்து, அல்லது குணத்தைச் சுற்றி அமைக்கப்படும். நாவலாசிரியர் பாத்திரத்தின் ஒரு சில குணங்களைத் தேர்ந்தெடுத்து மற்றவற்றை விட்டுவிடுவர். அதனால் பாத்திரத்தின் பிற பண்புகள் விளக்கம் பெறுவதில்லை. இப்பாத்திரம் பற்றி நாவலாசிரியர் விளக்கி உரைக்காமலே இப்பாத்திரத்தின் பண்பினை வாசகர் உடனே விளங்கிக் கொள்வர். ஒரு நிலை மாந்தர், நாவல் முழுமையும் ஒரே குணத்தவராகக் காணப்படுவர். ரெனி வெல்லாக், ஆஸ்டின்வாரன் ஆகியோர் தம்முடைய இலக்கியக் கொள்கையில், ‘வளர்ச்சி பெறாப் பாத்திரப்படைப்பு, முதன்மையானதாகவோ, சமுதாய நிலையில் மிகத் தெளிவாகப் புலப்படும் நிலையிலோ அமைந்த தனிப் பண்பை வெளிப்படுத்துகிறது. அது ஒரு கேலிச் சித்திரமாகவோ, உயர்ந்த குறிக்கோள் நிலையுடையதாகவோ இருக்கலாம்’ என்று கூறுவர்.
மு.வரதராசனாரின் கயமை எனும் நாவலில் வரும் வெங்கடேசன், எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு எனும் நாவலில் வரும் பசுபதி ஆகியோர் நாவல்களின் தொடக்கம் முதல் இறுதி வரை சுயநலமும், தீமை செய்வதும் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். நாவல் முடிவு வரை ஒரே நிலையிலேயே வாழும் வளர்ச்சி பெறாப் பாத்திரங்களாக இவர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.
சில திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர் ஒருவர் வருவார். அவர் படத்தில் எந்த இடத்தில் வந்தாலும் நகைச்சுவையாளராக மட்டுமே செயல்படுவார். அவரிடம் பிற பண்புகள் எதுவும் வெளிப்படாது. ஒருநிலை மாந்தரும் இப்படிப்பட்டவரே.
வளர்ச்சி பெறும் பாத்திரப் படைப்பு
|
இப்பாத்திரங்களை முழுநிலை மாந்தர் என்றே தமிழ் ஆய்வாளர்கள் மொழி பெயர்ப்பர். இப்பாத்திரங்கள் நாவலின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைக்கும் ஏற்றவண்ணம், தம் இயல்புகளில் தாமும் வளர்கின்றனர். இவர்களின் பண்புகள் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை மாறாமல் இருப்பதில்லை. வளர்ச்சியும் மாற்றமும் இவ்வகைப் பாத்திரங்களுக்கு உண்டு.
இம் முழு நிலை மாந்தர் ஆழமான குறிக்கோள் கொண்டவர்களாக இருப்பர். வாசகன் தானும் அப்பாத்திரத்தைப் போலச் சிறப்புடைய மனிதனாக வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் இருக்குமாறு இம் முழுநிலை மாந்தர்கள் செய்து விடுகின்றனர்.
முழுநிலை மாந்தர் தம் வாழ்வுப் போக்கில் எத்தகைய மாற்றத்தையும் அடையலாம். தொடக்கத்தில் இருந்தது போலவே இருக்கக் கூடாது. வாழ்வில் ஒவ்வொரு சூழலிலும் முழுநிலை மாந்தர் வளர்நிலை அடைதல் வேண்டும். ஆனால் இந்த வளர்ச்சி அல்லது மாற்றம் பொருத்தமாக இருக்க வேண்டும். வேண்டுமென்றே செய்யப்பட்ட திடீர் மாற்றமாக இருக்கக் கூடாது. தவிர்க்க இயலாச் சூழலில் இம்மாற்றம் நிகழ்ந்ததாக அமைய வேண்டும்.
எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு எனும் நாவலின் கதைத் தலைவி மஞ்சுளா. இவள் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தாலும் உயர்ந்த குணநலன்களும், அறிவுப் பூர்வமாகச் சிந்தித்து முடிவு எடுக்கும் தன்மைகளும் கொண்டவளாக விளங்குகிறாள். கதையின் வளர்ச்சிக்கேற்ப அவளின் நற்குணங்களும் அறிவும் வளர்ந்து கொண்டே செல்கின்றன. காதலித்த நீலகண்டனும் நட்புக்குரிய சரஸாவும் தன்னை ஏமாற்றிய போதும், உணர்வு நிலைக்கு ஆட்படாமல் அறிவு நிலையில் மென்மையாகப் பிரச்சனைகளை அணுகுகிறாள். இவள் வளர்ச்சி பெறும் பாத்திரத்திற்குச் சான்றாக அமைகிறாள்.