Thursday, 11 July 2013

சிறுகதையின் தோற்றம்2.1 சிறுகதையின் தோற்றம்
காலம் காலமாகக் கதை சொல்வதும், கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும், எல்லா மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்திருக்கிறது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, மக்கள் இனக் குழுக்களாக இயங்கி வந்த போது, ஓய்வு நேரங்களில் சக மனிதர்களிடம் தொடர்பு கொள்வதற்கும், குடும்ப உறவினர்களுடன் பொழுதைக் கழிக்கவும் கதை கூறும் மரபைக் கையாண்டு வந்துள்ளனர். கதை கூறுபவர் தன்னுடைய கற்பனை வளத்தாலும், அனுபவத்தின் பயனாலும், தான் கண்டதையும் கேட்டதையும் விரித்துச் சொல்லி, கேட்போரின் பொழுது போக்கிற்குத் துணை நின்றனர். ‘ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜாவாம்என்று சுவாரஸ்ய உணர்வோடு கதை தொடங்கும் மரபும் நம்மிடையே இருந்துள்ளது. பொய்ம்மொழி, பொய்க்கதை, புனைகதை, கட்டுக்கதை, பழங்கதை என்றெல்லாம் கதைகள் அக்காலத்தில் சுட்டப்பட்டுள்ளன. குடும்பங்களில் சிறு குழந்தைகளுக்குப்பாட்டி கதைசொல்லும் மரபு உண்டு. அம்மரபு போன தலைமுறை வரை தமிழ் மண்ணில் இருந்து வந்துள்ளது.
பின்புஎழுத்து மரபுஏற்பட்ட போது, கதைகள் பெரிய எழுத்துக் கதைகளாக எழுதப்பட்டன. பின்னர், அச்சு இயந்திர வருகைக்குப் பின்னர், அக்கதைகள் நூல்களாகவும் வெளிவந்தன. இன்றும், அவை பெரிய எழுத்துக் கதைகள் என்ற பெயரில் விற்பனையில் உள்ளன. அல்லி அரசாணி மாலை, புலந்திரன் கதை, வீர அபிமன்யு, மயில் இராவணன் கதை, சதகண்ட இராவணன் கதை, நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை என்று இக்கதைகள் பல.
மேலை நாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும், கீழை நாடான ரஷ்யாவிலும் சிறுகதை என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி, ஓர் உணர்ச்சி, ஓரிரு பாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, அரைமணி நேரத்தில், ஒரே அமர்வில் படித்து முடித்துவிடக் கூடிய கதைகள் தோற்றம் பெற்று அச்சேறின. ஆங்கிலக் கல்வியின் காரணமாக, நம்மவர்களும் அதே போன்ற கதை மரபை நம்மிடையே உருவாக்கத் தொடங்கினர். இப்படித் தொடங்கியதுதான் தமிழ்ச் சிறுகதை வரலாறு.
2.1.1 உலக மொழிகளில் சிறுகதையின் தோற்றம்
உலக நாடுகளில், மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் தான் சிறுகதை மிக விருப்பமான இலக்கிய வடிவமாகப் போற்றப்படுகிறது. நாவலை விடச் சிறுகதைக்கே அங்குச் செல்வாக்கு அதிகம். பிராங்க் கானர் (Frank O ‘Connor) என்ற சிறுகதை விமர்சகர், "அமெரிக்கர்கள் சிறுகதை எழுதுவதில் காண்பிக்கும் திறமையைப் பார்த்தால், அதை அவர்கள் தேசியக் கலையாகக் கருதுகிறார்கள் என்று சொல்லலாம்" என்று குறிப்பிடுகிறார். "அமெரிக்க மக்களிடையே இருக்கும் வேகமும் பொறுமையின்மையும் காரணமாகத்தான் சிறுகதை வடிவம் அமெரிக்க இலக்கிய உணர்வுக்கு ஏற்புடையதாயிற்று" என்று வில்லியம் டீன் ஹவெல்ஸ் (William Dean Howells) என்ற மற்றொரு விமர்சகர் கூறியுள்ளார். அமெரிக்காவின் மிகச் சிறந்த சிறுகதைப் படைப்பாளர்களாக விளங்கும் எட்கர் ஆலன்போ, நத்தானியல் ஹாதான், வாஷிங்டன் இர்விங், ஓஹென்றி ஆகியோர் உலக நாடுகள் அனைத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாகத் திகழ்கின்றனர்.
பிரான்ஸ் நாட்டில் தோன்றிய சிறுகதைகள் உலக அளவிலேயே மிகப் புகழ்பெற்றவை ஆகும். மெரிமீ (Merimee), பால்ஸாக் (Balzac), மாப்பசான் (Maupassant) ஆகிய சிறுகதை ஆசிரியர்கள், ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமாக உலகத்தினரால் அறியப்பட்டனர். இவர்களில், மாப்பசான்தான் இந்திய மொழிச் சிறுகதைப் படைப்பாளிகளுக்கு வழிகாட்டியாக இருந்திருக்கின்றார்.
ரஷ்யாவில் செகாவ் (Chekkov), துர்கனேவ், கொகொல் (Gogol) ஆகியோர் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர்கள். இவர்களில் கொகொல் எழுதிய மேலங்கி (Overcoat) புகழ்பெற்ற கதையாகும். இக்கதையை முன்மாதிரியாகக் கொண்டுதான் ரஷ்யாவில் பலர் சிறுகதை படைத்துள்ளனர். அதைக் கருத்தில் கொண்டு, "கொகொலின் மேலங்கியுள் இருந்துதான் நாங்கள் எல்லாரும் பிறந்து வந்தோம்" (We all come out from under Gogol’s Overcoat) என்று கூறி, நன்றி பாராட்டுகிறார் துர்கனேவ். கொகொல், ரஷ்யாவில்சிறுகதையின் தந்தைஎன்று போற்றப்படுகிறார்.
இங்கிலாந்தில் ரட்யாட் கிப்ளிங் (Rudyard Kipling), ஆர்.எல்.ஸ்டீவன்சன் (R.L.Stevenson), கதரீன் மான்ஸ்ஃபீல்ட் (Katherene Mansfield), தாமஸ் ஹார்டி (Thomas Hardy), ஜோசப் கான்ராட் (Joseph Conrad), ஹென்றி ஜேம்ஸ் (Henry James), ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joice) போன்றவர்கள் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் ஆவார்கள். இங்கிலாந்தில் ஸ்ட்ரான்ட் (Strand), ஆர்கஸி (Argosy), பியர்சன்ஸ் மேகஸீன் (Pearsons Magazine) என்ற இதழ்கள் சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.
2.1.2 தமிழில் சிறுகதையின் தோற்றம்
தமிழ் மொழியில் அச்சு இயந்திரம் கண்டு பிடிக்கப்பட்ட பின்பு வீரமாமுனிவர் (1680-1749) எழுதிய பரமார்த்த குரு கதை என்ற கதை நூல், அவர் காலத்திற்குப் பிறகு, 1822இல் சென்னை கல்விச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. இந்நூல்தான், சில ஆய்வாளர்களால் தமிழின் முதல் சிறுகதை நூலாகச் சுட்டப்படுகிறது. பின்பு கதாமஞ்சரி (1826), ஈசாப்பின் நீதிக்கதைகள் (1853), மதனகாமராஜன் கதை (1885), மயில் இராவணன் கதை (1868), முப்பத்திரண்டு பதுமை கதை (1869), தமிழறியும் பெருமாள் கதை (1869), விவேக சாகரம் (1875), கதா சிந்தாமணி (1876) என்ற கதை நூல்கள் வெளியாயின. பண்டிதர் ..நடேச சாஸ்திரி, தமிழ் நாட்டில் வழங்கி வந்த செவிவழிக் கதைகளைத் தொகுத்து, தக்காணத்துப் பூர்வ கதைகள் (1880), திராவிடப் பூர்வ காலக் கதைகள் (1886), திராவிட மத்திய காலக் கதைகள் (1886) என்ற தலைப்புகளில் வெளியிட்டார். தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கி வந்த தெனாலிராமன் கதை, மரியாதை ராமன் கதை போன்ற கதைகளும் தமிழில் அச்சாயின. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் தொகுத்த விநோத ரச மஞ்சரி என்ற கதை நூல் 1876இல் வெளிவந்தது. இதில் கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம், ஏகம்பவாணன், ஒளவையார் போன்றோர் வரலாறு கதையாகச் சொல்லப்பட்டுள்ளது. திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அபிநவக் கதைகள் என்ற கதைத் தொகுதியை எழுதி வெளியிட்டுள்ளார். இதில் கற்பலங்காரம், தனபாலன், கோமளம், சுப்பைய்யர், கிருஷ்ணன், ஆஷாடபூதி என்ற ஆறு கதைகள் இடம் பெற்றிருந்தன. இவ்வாறு, தமிழில் சிறுகதை முயற்சிகள் அச்சு வடிவில் சுமார் ஒரு நூற்றாண்டுக் காலம் மேற்கொள்ளப்பட்டன என்பதை அறிய முடிகின்ற

  சிறுகதை
இன்றைய படைப்பிலக்கியங்களின் கதைக்கரு மனித வாழ்விலிருந்தே உருவாகிறது. இவ்வகையில் மனிதர்களின் அனுபவங்களும், எண்ணங்களும் சிறப்பாக - சுதந்திரமாக - வெளிப்படும் பொழுது படைப்பிலக்கியங்கள் தோன்றுகின்றன. இவ்விலக்கியங்கள் நாவல், சிறுகதை, நாடகம், கவிதை என்று பல்வேறு வடிவங்களைக் கொண்டு விரிவு பெறுகின்றன. இவற்றுள் சிறுகதை மனித வாழ்க்கையோடு மிக நெருங்கி இருக்கும் இலக்கிய வகையாகிறது.
  சிறுகதைப் படைப்பிலக்கியம்
எந்த வகைப் படைப்பிலக்கியத்திற்கும், ஆர்வத்திற்கும் மேலாக மூன்று அடிப்படைகள் தேவைப்படுகின்றன.
1) வாழ்க்கை அனுபவம்
2)
வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் ஆர்வம்
3)
கற்பனைத் திறன்
ஆகியனவாம். இத்தன்மையிலேயே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் தோன்றியுள்ளன.
சிறுகதை, உரைநடைப் படைப்பிலக்கியத்திற்கு உரியது. 20ஆம் நூற்றாண்டின் புதுமைகளாக இவை உருவாகியுள்ளன. நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகள், கற்பனைகள் சிறுகதைகளாக மலர்கின்றன. இக்காலப் படைப்பிலக்கியங்களுள் சிறந்ததாகச் சிறுகதை இலக்கியம் கருதப்படுகிறது. உயிராக உணர்ச்சியும், உருவமாக மொழியும் அமைந்து சிறுகதை வாழ்வு பெற்றுள்ளது. மக்களை இன்புறுத்தும் வகையிலும், அறிவுறுத்தும் வகையிலும் சிறுகதைகள் தோன்றியுள்ளன.
சிறுகதைப் படைப்பிலக்கியங்களின் மூலம் வாழ்க்கை உயர்ந்திருக்கிறது. மதங்கள் வளர்ந்திருக்கின்றன. மனிதப் பண்புகள் மெருகேறி இருக்கின்றன. இதைப் பற்றி இப்பகுதியில் காண்போம்.
.கா :
1. காந்தியடிகள் அரிச்சந்திரன் கதை மீது ஈடுபாடு கொண்டு உண்மை பேசுபவராக விளங்கினார்.
2. வீரக்கதைகளைக் கேட்டு சிவாஜி தீரனாகத் திகழ்ந்தார்.
பொதுவாகச் சிறுகதைகள் ஒரு படிப்பினையை அடிப்படையாகக் கொண்டு உயர்ந்த குறிக்கோள்களை வலியுறுத்துகின்றன. மேலும் சிறுகதைகள் பிற படைப்பிலக்கியங்களைப் போலவே உயிர்த்துடிப்புடையனவாய் விளங்குகின்றன.
படைப்பு என்பது இயற்கையின் முன் ஒரு கண்ணாடியைத் தூக்கிப் பிடிப்பதுபோல் அமைவதாகும். கண்ணாடியில் தெரிவன உண்மையான பொருள்கள் அல்ல. அவை போலிகளும் அல்ல. உண்மையை ஒத்த பிம்பங்கள். சிறுகதைப் படைப்பிலக்கியம் இத்தகைய வடிவினையே பெற்றுள்ளது. உண்மை நிகழ்வுகள், அனுபவங்களைக் கொண்டமைவதால் சிறுகதை படைப்பிலக்கிய வகைக்குப் பொருத்தமுடையதாகிறது.
1.1.1 படைப்பிலக்கியம்
அறிவின் வாயிலாக உலகத்தை அறிவதைவிட, புலன்களின் வாயிலாக உலகத்தைக் காண முயற்சி செய்தல் வேண்டும். இத்தகைய படைப்பாளரின் உணர்ச்சியே படைப்பிலக்கியத் தோற்றத்திற்கு அடிப்படையாகிறது. ஓர் அழகான காட்சியைக் காணும் அனைவரும் அக்காட்சிக்கு உணர்ச்சி வடிவம் தருவதில்லை. பெரும்பாலோர் அதை மறந்து விடுகின்றனர். கலையுள்ளம் படைத்தவர்கள் மட்டுமே அந்த அழகுணர்ச்சியை மனத்தில் பதித்து, அதற்குக் கலை வடிவம் தந்து அழியாமல் காக்கின்றனர். அழகுணர்ச்சியும், நுண்ணுணர்ச்சியும் மிக்க மனிதனின் உணர்ச்சி வெளிப்பாடே படைப்பிலக்கியத்திற்குக் காரணமாகிறது. படைப்பிலக்கியங்கள் எழக் காரணங்களாவன :
1) மனிதன் தன் அனுபவத்தைத் தானே வெளியிட வேண்டும் என்ற விருப்பம்.
2) பிற மக்களுடன் மனிதன் கொண்டிருக்கும் ஈடுபாடு.
3) மனிதன், உண்மை மற்றும் கற்பனை உலகோடு கொண்டிருக்கும்  ஈடுபாடு.
4) தன் அனுபவத்திற்குக் கலைவடிவம் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம்.
இனி, படைப்பிலக்கியத்தின் தன்மைகளைக் காண்போம்.
சொற்களால் திறம்பட அமைவதே படைப்பிலக்கியம். படைப்பிலக்கியம் தனி ஆற்றல் பெற்றவர்களால் உருவாக்கப்படுகிறது. படைப்பாளன் தன் உள்ளத்தில், உணர்வுகளுடன் பதிந்தவற்றை மட்டுமே படைத்துக் காட்டுகிறான். எந்த ஒரு படைப்பும் பொதுமக்களால் ஏற்கப்பட்டு, அறிஞர்களின் ஆதரவு பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். அவ்வகையில் படைப்பிலக்கியங்கள் உண்மை நிகழ்வுகளைக் கொண்டு விளங்குகின்றன. படைப்பிலக்கியம் மனிதர்களின் உள்ளத்தை ஆள்கிறது. மனித மனம் பண்பட உதவுகிறது. ஒரு சமுதாயத்தின் விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை முதலியவற்றைப் பண்படுத்துவன படைப்பிலக்கியங்களே. இங்ஙனம் படைப்பிலக்கியங்கள் மனித வாழ்விற்குத் துணை நிற்பதை அறியலாம்.
1.1.2 சிறுகதை இலக்கியம்
இந்தியாவில் ஏற்பட்ட ஆங்கிலக் கல்வி, அறிவியல் புரட்சி, தேசிய எழுச்சி ஆகியன உரைநடை இலக்கியத்தை வளர்ப்பதற்கான காரணிகள் ஆயின. இந்திய மொழிகளிலும் மரபுக் கவிதைகள் படிப்படியாய்க் குறைந்து, புதிய கவிதைகள் தோன்றின. அவ்வாறே கதைகளிலும் மரபுநிலை மாறி, புதுமை இடம்பெறத் தொடங்கியது. இதன் விளைவு சிறுகதை இலக்கியம் சிறந்த இலக்கிய வடிவமாய் மலர ஆரம்பித்தது. சிறுகதை ஐரோப்பியர் வரவால் தமிழுக்குக் கிடைத்தது என்பது அறியத்தக்கது.
சிறுகதை, மக்களின் கதைகேட்கும் ஆர்வத்தால் பொழுது போக்கிற்கு இடமளிக்கும் அளவில் தோன்றியதாகும். இன்று, இச்சிறுகதைகள் சமுதாயத்தில் பலரும் விரும்பிப் படித்துப் பயன்கொள்ளத்தக்க அளவில் எளிய இலக்கியங்களாய்த் திகழ்கின்றன. சிறுகதைகள் வாழ்க்கைக்குத் திருப்பங்களாக அமைகின்றன. சிறந்த சிறுகதைகள் போதனை செய்து ஒழுக்கத்தினை உயர்த்துவதாகவும் அமைகின்றன.
  அமைப்பு
கற்பனை ஆற்றல், சொல் நயம், நடை அமைப்பு மிக்க படைப்பாளரின் படைப்பே சிறுகதையின் தோற்றத்திற்கு அடிப்படையாகிறது. அளவிற் சிறியதாய் அமைந்து, ஆற்றல் மிக்கதோர் இலக்கிய வடிவமாய்ச் சிறுகதைகள் திகழ்கின்றன. சிறுகதை இலக்கியத்தினை மிகச் சிரமமான வெளியீடு என்று கூறுவது பொருந்தும். ஏனெனில், சொல்கின்ற கருத்தில் தெளிவும், வெளியீட்டில் சிக்கனமும், தெளிவான ஓட்டமும், தொய்வில்லாத ஈர்ப்பும் இதற்கு அவசியம். ஐந்நூறு பக்கங்களில் எழுதப் பட்டிருக்கும் நாவலை விட ஐந்து பக்கச் சிறுகதையின் வேகம் மிகுதியானதாகும்.
சிறுகதை என்பது தந்தத்தில் பொம்மையைக் கூர்மையாய்ச் செதுக்குவது போன்றது. நல்ல நடையினால் சிறுகதை செதுக்கப்பட வேண்டும். சொல்லுகின்ற செய்தியை, கூர்மையாய்த் தெளிவாய்ச் சொல்ல வேண்டும். இதன் மூலமே சிறுகதையின் கலையம்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய முடியும்.
இங்ஙனம் சிறுகதைகள் படைப்பிலக்கிய வகையுள் ஒன்றாய் விளங்குவதை அறியலாம். சிறுகதைப் படைப்பாளர்கள் தங்கள் உள்ளத்திற்கும், விருப்பத்திற்கும் ஏற்ப, புறவாழ்க்கையில் தாம் காணும் காட்சிகளை, அனுபவங்களைக் கொண்டு சிறுகதைகளைப் புதியதாகப் படைக்கின்றனர். இப்படைப்புகள் மனித சமூகத்தை நல்வழிப்படுத்தும் நோக்கில் அமைதல் வேண்டும். சிறுகதைகள் மூலம் படைப்பாளரின் கற்பனை, மனநிலை, ஆளுமை ஆகியவை வெளிப்பட வேண்டும். இவ் அளவிலேயே சிறுகதைப் படைப்பிலக்கியங்கள் சிறப்புப் பெற இயலும்.

சிறுகதை இலக்கணம்
வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு.
சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ, பண்போ கிடையாது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சிறுகதைக்கு, பண்போ தனி இலக்கணமோ இல்லை என்று கூறிவிட முடியாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது. 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறுகதையின் பொதுவான தன்மைகள் குறித்து ஆய்வுக் கருத்துகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் சிறுகதைக்கெனச் சில வரைமுறைகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர்.
  இலக்கணம்
1) சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும்.
2) தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும்.
3) சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும்.

4)
அளவுக்கு அதிகமான கதைமாந்தர்களுக்கு அங்கு இடமில்லை.

5)
விரிவான வருணனைக்கும், சூழ்நிலைக்கும் சிறுகதை இடம்தரல் கூடாது.

6)
குறைவான, ஏற்ற சொற்களால் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

7)
பாத்திரங்களின் உரையாடல்களில் சொற்செட்டு அவசியம்.

8)
சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும்.

9)
சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும்.

10)
நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.
ஒரு நல்ல சிறுகதை என்பது ஒரு சுவைமிக்க மாம்பழத்தை இறுதிவரை விரும்பிச் சுவைப்பது போன்றதாகும். அவ்வாறு இன்றி, மாம்பழத்தை முதல் கடியிலேயே வீசியெறிந்து விட வேண்டும் என்ற எண்ணத்தை ஒரு சிறுகதை ஏற்படுத்தினால், அச்சிறுகதையினால் பயன் ஒன்றும் இல்லை என்பது தெரியவருகிறது.
ஒரு சிறுகதைக்குப் பின்னே உள்ள படைப்பாளரின் கலை ஆற்றல், கற்பனைத் திறன், சொல்லாட்சி, அவர் மறைமுகமாகக் கூறும் செய்தி - இவையனைத்தும் இலக்கண வரம்புகளை விட முக்கியமானவை.
குறிஞ்சிக் கலியில் (51) கபிலர் பாடிய கள்வன் மகன் என்ற செய்யுள் கருத்தை இங்கு எடுத்துக் கொள்வோம். தாகத்திற்கு நீர் பருக வரும் வழிப்போக்கன் போல, தலைவன், தலைவி வீட்டிற்கு வருகிறான். தாகத்தைத் தணிக்க, நீர் ஊற்றும்போது தலைவன் அவள் கையைப் பற்றுகிறான். தலைவி கூச்சலிடுகின்றாள். இதைக் கேட்ட தாய் பதறி ஓடிவருவதைக் கண்டு, தலைவனைக் காட்டிக் கொடுக்காமல்அவனுக்கு விக்கிக் கொண்டு விட்டதுஎன்று தலைவி ஒரு பொய்யைக் கூறுகிறாள். கள்வன் மகன் என்று அவனை அன்பு பொங்க ஏசுகிறாள்.
இவ்வளவும் ஒரே நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. குறிப்பிட்ட ஒரே இடம். மூன்றே பாத்திரங்கள். ஒரே உணர்ச்சி. சின்னஞ் சிறு நிகழ்வுகள் மூலம் விரியும் கதை. எவ்வளவு சொற்செட்டு!, எவ்வளவு உயிராற்றல்! அந்தச் செய்யுள் எந்த நீதியையும் புகட்டவில்லை. ஆனால் இயற்கையான உணர்ச்சிக்கும், பெண்மையின் பண்புக்கும் இடையேயான போராட்டத்தைச் சித்திரித்து வெற்றி கண்டுள்ளது. படைப்பாளரின் இத்திறன் இலக்கணத்தை விட முக்கியமானதாகவே கருத இடமளிக்கிறது.
1.2.1 சிறுகதையின் தொடக்கம்
சிறுகதையின் தொடக்கம் குதிரைப் பந்தயம் போன்று விறுவிறுப்பாய் அமைதல் வேண்டும். சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான தொடக்கம் இன்றியமையாததாகிறது. அப்பொழுது தான் அதன் தொடர்ச்சி நெகிழ்ச்சியின்றி அமையும். படிப்போரின் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும். சிறுகதையின் தொடக்கம் வாசகர்களை ஈர்த்து, படிக்கத் தூண்டுவதாய் இருத்தல் வேண்டும். சிறுகதையில் ஒவ்வொரு வரியும் முக்கியம். அதில் அநாவசியத்திற்கு இடமில்லை என்பதிலிருந்து தொடக்கம் சிறப்பாக அமைய வேண்டியதன் அவசியத்தை உணரலாம்.
சிறுகதையைத் தொடங்கி எழுதுவது என்பது யானை உருவத்தைச் செதுக்குவதற்கு ஒப்பாகும். தேக்கு மரத்துண்டில் யானையைச் செதுக்க விரும்புகின்றவன், முதலில் யானையின் உருவத்தை மனத்தில் பதித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒவ்வொரு செதுக்கலையும் யானையின் உருவத்தை நோக்கிச் செலுத்த வேண்டும். அவ்வாறு இன்றி, சிலையைச் செதுக்குபவன் நடுவில் ஒரு குதிரையை மனத்தில் நினைத்தான் என்றால் சிலையானது யானையின் முகமும், குதிரையின் உடலுமாய் மாறி அமைந்துவிடவும் கூடும். அதாவது யாதிரை அல்லது குனை ஆக உருவாகிவிடக் கூடும். இவ்வளவிலே சிறுகதையின் தொடக்கமும் சிறப்பாக அமையப்பெறவில்லை, எனில் அதன் தொடர்நிகழ்வுகளை ஒருமுகப்படுத்தல் என்பதும் இயலாமல் போய்விடும்.
மேற்கண்ட அளவில் சிறுகதைத் தொடக்கத்தின் முக்கியத்துவம் அறியப்படுகிறது.
1.2.2 சிறுகதையின் முடிவு
சிறுகதையின் தொடக்கத்தைப் போன்றே முடிவும் முக்கியத்துவம் பெறல் வேண்டும். சிறுகதையின் முடிவு இறுதிவரை படிப்போரின் கவனத்தைக் கவரக் கூடியதாய் இருக்க வேண்டும். சிறுகதையில் முடிவு கூறப்படவில்லை எனில் அது மனத்தில் நிலைத்து நிற்காது. கதையின் முடிவு உரைக்கப்படல் அல்லது சிந்திக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலமே படைப்பாளரின் ஆற்றல் உணரப்படும். ஆகவே சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான முடிவு அவசியம் என்பது உணரப்படுகிறது.
சிறுகதையின் முடிவு நன்மையானதாகவும் அன்றித் தீமையானதாகவும் அமையலாம். சில வேளைகளில் கதையின் முடிவு முரண்பாடானதாகவும் அமைவது உண்டு. முரண்பாடான முடிவுகள் படிப்பவர்களைச் சிந்திக்க வைப்பதும் உண்டு. சிறந்த முடிவினைக் கொண்ட சிறுகதையே மனத்தில் நிலைக்கும். சிறுகதையின் சிறந்த முடிவு சமூகப்பயன் விளைவிக்கக் கூடியது. சிலவேளைகளில் சிறுகதைகளின் முடிவுகள் தலைப்புகளாய் அமைந்த நிலையில் அவை சிறப்புப் பெறுவதும் உண்டு. இத்தகைய சிறுகதைகளைப் படிக்கத் தொடங்கிய உடனேயே ந்க் கதையின் போக்கையும், அதன் முடிவையும் அறிந்து கொள்ள இயலும்.
முடிவுகளைத் தலைப்புகளாகக் கொண்ட சிறுகதைகள் சிலவற்றின் பெயர்களை இங்குக் காணலாம். நா.பார்த்தசாரதியின் ஊமைப் பேச்சு, ஜெயகாந்தனின் வேலை கொடுத்தவன், புதுமைப்பித்தனின் திண்ணைப் பேர்வழி, சோமுவின் மங்களம் போன்ற கதைகளை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
1.2.3 சிறுகதையின் உச்சநிலை
உச்சநிலை என்பது, வாசகர்கள் எதிர்பாராத வகையில் அல்லது உணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சியில் கதையை முடித்தலாகும். சிறுகதைகளில் உச்சநிலைக்கு இடமில்லை எனில் அது சாதாரணக் கதையாகவே கருத இடமளிக்கும். படைப்பிலக்கிய நிலைக்குத் தகுதியுடையதாகாது. உச்சநிலையே படைப்பாளரின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாயுள்ளது. படைப்பாளரின் மறைமுகக் கருத்துகள் சில வேளைகளில் உச்ச நிலைக்கு இடமளிப்பதும் உண்டு.
சிறுகதைகள், படிப்பவரிடத்தே அடுத்தடுத்து என்ன நிகழுமோ என்ற எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி, அதன்பின் உச்சநிலைக்கு உரியதாகிப் பயன் விளைவிக்கவேண்டும். உச்சநிலையை எதிர்பார்த்துப் படிக்குமளவில்தான் சிறுகதை அமைப்புத் தொய்வின்றி அமையும். சிறுகதையின் உச்சநிலை முடிவினையும், பயனையும் வழங்க வல்லதாய் அமைகிறது. கதை நிகழ்ச்சி, கதைமாந்தர் மூலமாகவே உச்சநிலை உயிர் பெறுகிறது. படைப்பாளர் உச்சநிலையினை அமைத்துக் கொடுப்பதன் மூலமே சிறுகதையின் வெற்றிக்கு வழிவகுக்க முடியும்.
கல்கி அவர்களின் கேதாரியின் தாயார் சிறுகதையில் உச்சநிலை சிறப்பிடம் பெறுகிறது. இச்சிறுகதையின் கதைத்தலைவன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடித்து முக்காடு இடும் பிராமணச் சமூக வழக்கத்தை முற்றிலும் வெறுப்பவனாக, அதை மாற்ற முயல்பவனாகக் காட்டப்படுகிறான். மேலும் அவன் அம்மாவுக்கு நேர்ந்த அந்நிலையை எண்ணி எண்ணி வருந்தி உயிரை விடுபவனாகவும் காட்டப்படுகிறான். கதை முழுவதிலும் இத்தகைய அவனது மனநிலையையே விவரிக்கும் படைப்பாளர், அவன் இறந்த பிறகு அவன் மனைவிக்கும் அதே நிலை ஏற்படுவதை உச்சக்கட்டமாக அமைத்து மனத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி விடுகிறார்.
1.2.4 சிறுகதையின் அமைப்பு
சிறுகதை விறுவிறுப்பாய்த் தொடங்கி, அதன் தொடர்ச்சியில் நெகிழ்ச்சி இல்லாமல் இயங்கி, உச்சநிலைக்குச் சென்று முடிவுவரை படிப்பவரின் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். படிப்பவர்களைச் சோர்வடையச் செய்யக் கூடாது. கதை உணர்ச்சியோட்டம் உடையதாய் அமைதல் வேண்டும். கதையமைப்பானது சங்கிலித்தொடர் போன்று கதைமாந்தர்களிடையே பின்னிப் பிணைந்து காணப்பட வேண்டும். கதையின் கருப்பொருள் எளிமையானதாய் இருக்க வேண்டும்.
சிறுகதை மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாய் அமைதல் வேண்டும். சமுதாயத் தேவையை நிறைவு செய்யும் பாங்கிலும் அமைதல் வேண்டும். நல்ல சிறுகதைக்கு, தொடக்கமும், முடிவும் இன்றியமையாதவையாகின்றன. சிறுகதையைப் படிக்கும் போது அடுத்து என்ன நிகழும் என்ற உணர்ச்சியும், எதிர்பார்ப்பும் ஏற்படுத்தும் வண்ணம் கதையமைப்பு இருத்தல் வேண்டும். படைப்பாளன் கதையில் இன்ன உணர்ச்சிதான் இடம்பெறவேண்டும் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும்.

1 comment: