Thursday, 11 July 2013

நாவல் இலக்கியம்படைப்பிலக்கிய வகையுள் கதை கூறும் இலக்கிய வகையைச் சார்ந்தது நாவல் இலக்கியம். நிறைய சம்பவங்களையும், பாத்திரங்களையும் கொண்டு ஒரு பெருங்கதையைக் கூறும் இலக்கியமாக நாவல் விளங்குகின்றது. எனவே இந்த இலக்கியத்தைக் கதை இலக்கியம் என்றே கூறலாம்.
பழங்காலக் கதை இலக்கியங்கள் பெரும்பாலும் கவிதை வடிவிலேயே தோன்றின. இது பெரும்பாலான மொழிகளுக்குப் பொருந்தும். வரலாற்றுத் தொடக்க காலத்தில் வடமொழியில் தோன்றிய இராமாயணம், மகாபாரதம் போன்ற கதை கூறும் இதிகாசங்கள் கவிதை வடிவில் தோன்றியவையே. சங்க காலத்தை அடுத்தும், இடைக்காலத்திலும் தமிழில் தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரிய புராணம் போன்ற கதை கூறும் இலக்கியங்கள் கவிதை வடிவ இலக்கியங்களே. பிற்காலத்தில் அச்சு எந்திரங்கள் அறிமுகமாகிய சூழலில் உரைநடை வடிவில் பெருங்கதைகள் எழுதும் நிலை ஏற்பட்டது. இதன் வெளிப்பாடே, நாவல் எனும் புதிய இலக்கிய வடிவம். இந்தப் புதிய இலக்கிய வகை பற்றிய செய்திகள் இப்பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
நாவல்
கதை கூறும் இலக்கிய வகையுள் ஒன்றாக நாவல் அல்லது புதினம் விளங்குகின்றது. பெரிய கதை ஒன்றினை உரைநடையில் கூறும் இலக்கியமாக இது அமையும்.
இடைக்காலத்தில் ஐரோப்பாவில் வீரர்களின் வீரதீரச் செயல்களையும், அவர்களின் காதலையும் கூறும் கதைகள் நிறைய எழுதப்பட்டன. ஆனால் இக்கதைகளும் கவிதை வடிவிலேயே தோன்றின. 13ஆம் நூற்றாண்டில் இத்தாலிக் கலைஞர்கள் நூவேல் என்னும் பெயர் கொண்ட பல கதைக் கொத்துக்களை வெளியிட்டனர். இவை கவிதை வடிவில் வெளிவந்தவை. பிற்காலத்தில் உரைநடையின் வாயிலாகக் கதை சொல்லும் மரபு ஏற்பட்டதும் இதுவே நாவல் எனும் புதிய இலக்கிய வகை தோன்றப் பின்புலமாக அமைந்தது என்பர்.
2.1.1 விளக்கம்
இத்தாலியில் தொடக்கத்தில் நாவல்லா (Novella) என்று அழைக்கப்பட்டதே, பின்னர், நாவல் என்று அழைக்கப்பட்டதாக ஆக்ஸ்போர்டு ஆங்கில இலக்கிய அகராதி கூறுகிறது. மேலும் அந்த அகராதி, உரைநடையில் கதை கூறுவதே நாவல் என்றும் கூறுகிறது. கிளாரா ரீவி என்பவர் எழுதப்பட்ட காலத்தின் உண்மையான வாழ்க்கையினையும், வாழ்வின் பழக்க வழக்கங்களையும் வெளியிடும் ஓவியம்தான் நாவல் என்று கூறுகிறார். குறிப்பிடத்தக்க ஒரு செய்தியைப் பற்றியதாகவும், மாந்தர்களையும் ஆழ்ந்த நோக்கினையும் அடித்தளமாக உடையதாகவும் உரைநடையில் அமைகின்ற புனைகதை தான் நாவல் என்று, சேம்பர் கலைக்களஞ்சியம் (Chamber's Encyclopedia) கூறுகின்றது.
உரைநடையில் அமைந்த, குறிப்பிடத்தக்க அளவில் நீண்ட கதையே நாவல் என்றும், அது படிப்பவர்களை ஒரு கற்பனையான உண்மை உலகிற்கு அழைத்துச் செல்கிறது என்றும், படைப்பாளன் உருவாக்கியதால் அந்த உலகம் புதியது என்றும் காதரீன் லீவர் தம்முடைய நாவலும் படிப்பாளியும் என்ற நூலில் கூறுகிறார்.
தமிழில் முதன் முதலில் நாவல் முயற்சியில் ஈடுபட்ட தமிழறிஞர்களும் நாவல் பற்றிய தத்தம் கருத்துகளைத் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆதியூர் அவதானி சரிதம் எழுதிய தூ.வி.சேஷய்யங்கார் தம் நாவல் முன்னுரையில்இது பொய்ப் பெயர்ப் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்என்று குறிப்பிடுகின்றார். மாயூரம் வேதநாயகம் பிள்ளை தம்முடைய பிரதாப முதலியார் சரித்திரம் என்னும் நாவலின் முன்னுரையில் நாவலை வசன காவியம் (Prosaic Epic) என்ற பெயரில் குறிப்பிடுகின்றார்.
ஆர்.எஸ்.நாராயணசாமி அய்யர் தாம் எழுதிய மாலினி மாதவம் என்ற நாவலின் முன்னுரையில் நாவல் பற்றிக் கீழ்வருமாறு கூறியுள்ளார்:
இனிய இயல்பான நடையில், சாதாரணமாய் யாவரும் அறியும் வண்ணம், பிரகிருதியின் இயற்கை அமைப்பையும், அழகையும், அற்புதங்களையும், ஜனசமூகங்களின் நடை, உடை, பாவனைகளையும், மனோ (Thought), வாக்கு (Words), காயம் (Deeds) என்னும் திரிகரணங்களாலும் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ள எண்ணிறந்த வித்தியாசங்களையும் பிரத்யட்சமாய் உள்ளபடி கண்ணாடி மேல் பிரதி பிம்பித்துக் காட்டுவதே நாவல் எனப்படும்.’
ஒரு நல்ல நாவல்தான், நாவல் பற்றி நமக்கு எடுத்துக் கூறும் ஆற்றலும், தன்மையும் உடையதாகும்.
நாவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் புதுமை என்ற பொருள் இருந்ததால் நாவல் இலக்கியப் பெயரினைத் தமிழில் கூறத் தமிழறிஞர் சிலர் புதினம் என்ற சொல்லை உருவாக்கிப் பயன்பாட்டில் வைத்தனர். ஆயினும் நாவல் என்ற பெயரே தமிழிலும் பயன்பாட்டில் இன்றும் நின்று நிலவுகின்றது.
எனவே, நாவல் என்பது
1)
உரைநடையில் எழுதப்படும் ஒரு படைப்பிலக்கியம்.
2)
ஒரு பெருங்கதையை விவரமாக எடுத்துக் கூறும் இலக்கியம்.
3)
வாழ்வியலைக் கூறுவது.
4)
பாத்திரங்களின் உரையாடல் மூலமாகவோ, செயல்பாடுகள் மூலமாகவோ கதை ஓட்டம் நிகழ்த்தப் பெறும் இலக்கியம்.2.2 நாவலின் தோற்றமும் வகைகளும்
கவிதையின் கற்பனை அழகுகளையும், உணர்ச்சி வெளிப்பாடுகளையும் உரைநடையில் கொண்டு வர முடியும் என்று உணர்த்தப்பட்ட பிறகு, தமிழ் உரைநடைப் படைப்பிலக்கியத்தில் முதலில் தோன்றியது நாவல் இலக்கியமேஎன, இரா.தண்டாயுதம் கூறுகிறார்.
  புரிதலில் கடினம்
ஓலைச் சுவடிக் காலத்தில் படைக்கப்பட்ட பெரும் கவிதை இலக்கியங்களை, மிகச் சிறந்த கல்வி அறிவும், பரந்துபட்ட இலக்கிய உணர்வும் உள்ளவர் மட்டுமே படிக்க முடியும் என்ற சூழல் நிலவியது. கதைகளைப் படிக்க, படித்துப் புரிந்து கொள்ளச் செய்யுள் வடிவம் சாதாரண மக்களுக்கு இடையூறாக இருந்தது. முதலில் செய்யுளைப் பிரித்துப் படித்து அதன் முழுப்பொருளையும் புரிந்து கொண்டு, கதையை விளங்கிக் கொள்ளுதல் மக்களுக்குச் சிரமமாக இருந்தது. செய்யுள் வடிவம் சில கட்டுப்பாடுகளுக்குரிய யாப்பு வடிவமாக இருந்ததால் கதை ஓட்டம் பாதிக்கப்பட்டது. கதையைப் படிக்க விரும்புவோர் மிகப் பெரும் இடர்களுக்கு உள்ளாக வேண்டியிருந்தது.


  உரைநடையும் எளிமையும்
உரைநடையில் அசை, சீர், தளை, தொடை, எதுகை, மோனை தேவையில்லை. மேலும் சாதாரண மக்கள் பேசும் நடையிலேயே எழுதுவது சுலபம். படிப்போரும் மிகச் சுலபமாக நாவலைப் படிக்க இயலும். எனவே உரைநடை வடிவத்தில் கதையை எழுதி நாவல் இலக்கியம் உருவாக்கினர்.
2.2.1 நாவலின் தோற்றம்
நாவலின் தோற்றம் பற்றி ஹென்றி லாரன் என்ற ஆய்வாளர் கீழ்க்கண்டவாறு கூறுவதாகப் பேரா.இரா. தண்டாயுதம் எடுத்து ரைக்கிறார்.
நாடகத்தின் ஒளியானது மிக வேகமாக இலக்கிய வானில் குன்றிடவே, புதிய விண்மீன் வரவை எதிர் நோக்கினர். புதிய இலக்கிய வடிவம் ஒன்றைத் தருவதால் வேடிக்கை உணர்வைத் தருவதுடன் அறக்கருத்தைத் தந்து முன்னேற்றும் தன்மை உடையதாகவும் எளிமை உடையதாகவும், அந்தக் காலத்தின் தேவையை நிரப்பக் கூடியதாகவும் ரிச்சர்ட்சன் புதிய வெள்ளியைப் படைத்தார்.’
எனவே, நாவலின் தோற்றம் என்பது இலக்கிய உலகில் புதிய விடிவெள்ளியாக அறிஞர்களால் கருதப்பட்டது. வாழ்க்கையை அதன் போக்கிலேயே எதார்த்தமாகப் படம் பிடித்துக் காட்டும் ஓர் இலக்கிய வடிவமாக உரைநடையில் தோன்றியதுதான் நாவல்.
நாவல் என்ற இலக்கிய வடிவம் தோன்றவில்லை என்றால் அவ்வக்கால மக்களின் சமூக வாழ்க்கை, வர்க்க வேறுபாடு, காதல் நிகழ்வுகள், உரையாடல் மொழி ஆகியவை பதிவு செய்யப்படாமல் போயிருக்க வாய்ப்புண்டு.
நாவலில் இடம் பெறும் எந்த ஒரு கதை மாந்தரும் தனித்து இயங்கி வாழ்வதில்லை. கதை மாந்தர் சமூகத்தின் ஓர் அங்கமாகத் திகழ்வதால் சமூகத்தின் வளர்ச்சியிலும், வீழ்ச்சியிலும் தன் பங்கினைச் செய்கின்றனர். சமூகம் கதை மாந்தரைப் பாதிப்பதால் சமூகம் நாவலில் முக்கியப் பங்காற்றுகின்றது. எனவே, நாவல் இலக்கியம், தான் தோன்றிய காலத்துச் சமூக வாழ்வை முழுமையாகப் பதிவு செய்கிறது. இது எதிர்கால வரலாற்று ஆய்விற்கு முக்கியப் பங்காற்றுவதாக விளங்கும்.
2.2.2 நாவலின் வகைகள்
நாவல்களைப் பொதுவாக இருபெரும் பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.
(1)
சமூக நாவல்
(2)
வரலாற்று நாவல்
நாவலின் கதைப் பின்னணி அடிப்படையில்தான் இப்பிரிவுகள் அமைகின்றன.
சமூகவியலாளர் மனிதனைச் சமூக விலங்கு என்றே கூறுவர். அச்சமூக விலங்கு கூடி வாழும் பொழுது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஒரு குறிப்பிட்ட காலச் சூழலில் சமூகத்தில் மக்களுக்குள் உணர்வு அடிப்படையில், வாழ்வு அடிப்படையில் ஏற்படும் சிக்கல்களைச் சமூக நாவல்கள் பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்துகின்றன. காதல், வறுமை, பொருளாதாரச் சிக்கல்கள், சாதியச் சிக்கல்கள், மத அடிப்படைச் சிக்கல்கள் முதலியவற்றைச் சமூக நாவல்கள் புலப்படுத்தக் கூடும். ஒரு படைப்பாளி, தான் வாழும் சமூகத்தில் கண்ட, கேட்ட, அனுபவித்த இன்பமான அல்லது சோகமான முடிவுகளைக் கொண்ட செய்திகளைச் சற்றுக் கற்பனையை இணைத்துச் சமூக நாவல்களாகப் படைப்பர். சமூக நாவல்களில் வரும் கதைப் பாத்திரங்களின் பெயர் மட்டும் கற்பனையாக இருந்து கதை உண்மையாக நடந்த நிகழ்ச்சியாக இருக்கக் கூடும். சமூக நாவல்களைப் பண்பு அடிப்படையில்
(1)
தார்த்தம் அல்லது நடப்பியல் நாவல்
(2)
போலி தார்த்த நாவல்
என்று பிரிப்பர். இந்த அடிப்படையில் சமூக நாவல்களைப் பிரித்தால் நாவலில் யதார்த்தமும், யதார்த்தம் போல் கற்பனையும் அமைந்திருப்பதாக ஏற்றுக் கொள்ளலாம்.
நாவல்களைக் கீழ்க்கண்ட முறையில் மேலும் பிரித்துக் காண்பர் ஆய்வாளர்கள்:
(1)
வட்டார நாவல்
(2)
குடும்ப நாவல்
(3)
சமுதாய நாவல்
(4)
குறுநாவல்
(5)
பெரு நாவல்
(6)
புதுமை நாவல்
(7)
உளவியல் நாவல்
(8)
ஆன்மிக நாவல்
(9)
துப்பறியும் நாவல்
இவ்வாறு வகைப்படுத்தினாலும் இன்னும் மார்க்சிய நாவல், அறிவியல் நாவல், அங்கத நாவல், கடித நாவல், பின் நவீனத்துவ நாவல் என்றும் பிரிப்பது உண்டு.
  வட்டார நாவல்
ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துக்குள் வாழும் மக்களின் சமூகப் பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் நாவல் வட்டார நாவல் எனப்படும். அம்மக்களின் உரையாடல் நடையிலேயே அந்நாவல் எழுதப்பட்டிருக்கும்.
இராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித்தேன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அவர்கள் மொழியிலேயே படம் பிடித்துக் காட்டுகிறது. அவரின் கரிப்பு மணிகள் தூத்துக்குடி பக்கத்தில் வாழும் உப்பளத் தொழிலாளர்களின் வாழ்வை வெளிப்படுத்துகிறது. தங்கர்பச்சானின் ஒன்பது ரூபாய் நோட்டு பண்ருட்டி பகுதி மக்களின் வாழ்வைக் காட்டுகிறது. மேலும், பொன்னீலனின் கரிசல், கி.ராஜ நாராயணனின் கோபல்ல கிராமம், ஹெப்சிபா ஜேசுதாசின் புத்தம் வீடு ஆகிய நாவல்களும் வட்டாரத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.
  குடும்ப நாவல்
குடும்பங்களில் ஏற்படும் சிக்கல்களை அக்குடும்பப் பாத்திரங்களைக் கொண்டே வெளிப்படுத்துவது குடும்ப நாவல் ஆகும். குடும்ப நாவல்களை எழுதுவதில் லஷ்மி தலைசிறந்து விளங்கினார். அவரின் பெரும்பாலான நாவல்கள் குடும்பப் பின்னணி நாவல்களே ஆகும். அனுராதா ரமணன், சிவசங்கரி போன்ற பெண் எழுத்தாளர்களே குடும்ப நாவல்கள் எழுதுவதில் முன் நின்றனர். ஆனாலும் தமிழில் அவ்வளவாக அறியப்படாத தஞ்சை பிரகாஷ் எழுதிய கரமுண்டார் வீடு குடும்ப நாவல்களுள் சிறந்ததாக விளங்குகின்றது.
  சமுதாய நாவல்
ஒரு குறிப்பிட்ட சாதியினரின் அல்லது சமுதாய மக்களின் வாழ்க்கை முறை, செயல்பாடுகள், அவர்களின் பிரச்சனைகள் ஆகியவற்றை ஆராய்வது சமுதாய நாவலாகும். சு.சமுத்திரத்தின் கோட்டுக்கு வெளியே என்ற நாவலை இதற்குச் சான்றாகக் கூறலாம். அகிலன் அவர்கள் எழுதிய பால்மரக் காட்டினிலே என்ற நாவல் மலேயா இரப்பர்த் தோட்டத் தொழிலாளிகளின் சமூக வாழ்க்கைப் பிரச்சனைகளை முழுவதுமாக வெளிப்படுத்தியது.
  குறுநாவல்
மிக அதிகமான பாத்திரங்களோடு நிறையப் பக்கங்களோடு இல்லாமல் குறைவான பாத்திரங்களைக் கொண்டு, சிறுகதையை விடச் சற்றுப் பெரிதாக அமைந்து விளங்கும் நாவல் குறுநாவலாகும். எம்.வி.வெங்கட்ராமின் உயிரின் யாத்திரை, இருட்டு, .கலியாணராமனின் பஞ்சம் பிழைக்க போன்றவை இதற்குச் சான்றாக அமையும்.
  பெரு நாவல்கள்
அளவில் பெரியதாக, மிக அதிகமான பாத்திரங்களுடன் நிகழ்வுகள் அதிகமாக உள்ள நாவல் பெரு நாவலாகும். பெரு நாவல்கள் பல பாகங்களாகக் கூட வெளி வரலாம். தொடக்க காலத்தில் பெரிய நாவல்களைக் கல்கி தமிழில் எழுதினார். கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவை சில பாகங்களாக வெளிவந்த பெருநாவல்களாகும்.
  புதுமை நாவல்கள்
நாவல்கள் கதையைத் தொடங்கி அதனை இன்பமுடிவாகவோ, துன்பமுடிவாகவோ முடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தன. சமூகத்திலும், வாழ்வுப் போக்கிலும் பல்வேறு புதிய முயற்சிகள் செய்து பார்க்கப்பட்டு அம்முயற்சிகள் வெற்றி பெறுவதை அல்லது தோல்வி அடைவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். நாவல் படைப்பிலும் புதிய முயற்சிகள் செய்யப்பட்டு, புதிய முறையில் கதை சொல்லும் பழக்கம் ஏற்பட்டது. .நா.சுப்பிரமணியம் எழுதிய ஒரு நாள், எம்.வி.வெங்கட்ராம் எழுதிய காதுகள் போன்றவை புதிய முறையில் படைக்கப்பட்ட நாவல்களாகும். ஒரு நாள் காலை முதல் இரவு முடிய ஒருவனின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகளின் அடிப்படையில் .நா.சுப்பிரமணியத்தின் ஒரு நாள் நாவல் படைக்கப்பட்டுள்ளது. தன் காதுகளில் ஏற்பட்ட ஒரு சிறு பிரச்சனையை அடிப்படையாகக் கொண்டு எம்.வி.வெங்கட்ராம் காதுகள் எனும் நாவலை எழுதினார். கதைகளில் இவ்வாறு புதுமையை ஏற்படுத்துவது தற்காலத்தில் வழக்கத்தில் வருவதைப் புதிய நாவல்கள் படிக்கும் சூழலில் நாம் அறிந்து கொள்ளலாம். சுந்தர ராமசாமியின் ஜெ.ஜெ. சில குறிப்புகள் எனும் நாவல் தமிழில் தோன்றிய புதுமை நாவல் வகைகளுள் முதன்மையானது. கற்பனை மாந்தராகிய ஒரு எழுத்தாளரின் குறிப்புகளாக, உண்மை மாந்தரைக் கூறுவதுபோல் அமைந்தது இந்நாவலாகும்.
  உளவியல் நாவல்
மனிதரின் உளமெய்ம்மை (Psychic Reality) சார்ந்த நிலையில் வெளியாகும் நாவல்கள் இவ்வகையைச் சார்ந்தவை. மனிதனின் வாழ்க்கை அவன் செய்யும் செயல்களால் நடப்பது இல்லை. அவன் எண்ணுகிற எண்ணங்களால்தான் நடக்கிறது. உடலோடு உயிர் ஒட்டியுள்ள வரை மனமும் எண்ணங்களால் அலைகிறது. அவ்வெண்ணங்களின் அடிப்படையில் நாவல் பாத்திரங்கள் செயல்படுவதே உளவியல் நாவல்களின் அடிப்படையாகும். எம்.வி.வெங்கட்ராமின் அரும்பு இந்நாவல் வகையைச் சார்ந்ததாகும்.
  ஆன்மிக நாவல்
ஆன்மிக எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு அவ்வான்மிகக் கருத்துகளை மக்கள் மனத்தில் பதிப்பதற்காக எழுதப்படும் நாவல்கள் ஆன்மிக நாவல்களாகும். எம்.வி.வெங்கட்ராம் எழுதிய இருட்டு, உயிரின் யாத்திரை போன்றவை ஆன்மிகத்தின் சிறப்புகளை உணர்த்த எழுதப்பட்டவை. இருட்டு நாவலில் தீய சக்திகள் ஒருவர் உடலில் நுழைந்து கடவுள் மறுப்புக் கொள்கைகளை அவர் மூலம் பிரச்சாரம் செய்யச் சொல்லுகின்றன என்று கூறுகின்றார். இத்தீய சக்திகள் எவ்வித நோயுமில்லாத மனிதர்களை இறுதியில் மரணத்தில் கொண்டு செலுத்திவிடும் தன்மை கொண்டவை என்று உரைக்கின்றார். நாத்திகர் தீயவர் என்றும், ஆத்திகர் நல்லவர் என்றும் இந்நாவல் கூறுகின்றது.
  துப்பறியும் நாவல்
ஒரு கொலையோ அல்லது சதிச் செயலோ நடந்தால், அதனைக் கண்டு பிடிக்க முயலும் ஒரு துப்பறியும் நிபுணரின் நுண்ணிய துப்பறியும் அறிவை விளக்குவது இவ்வகை நாவல்கள். தமிழில் தொடக்க காலத் துப்பறியும் நாவல்கள் சர் ஆர்தர் கானன்டாயில், ரெயினால்ட்ஸ் போன்ற ஐரோப்பியத் துப்பறியும் நாவலாசிரியர்களின் படைப்புகளின் தழுவல்களாகவே வெளிவந்தன. வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், ஜே.ஆர்.ரங்கராஜு, கோதை நாயகி அம்மாள் போன்றவர்கள் இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டனர். துப்பறியும் நாவலில் ஆர்தர் கானன்டாயிலின் கற்பனைப் பாத்திரமான ஷெர்லாக்ஹோம்ஸ் என்ற பாத்திரத்தின் மறுபதிப்பாகச் சங்கர்லால் என்ற பாத்திரத்தை உண்மைப் பாத்திரம் போல் படைத்துப் புகழ் பெற்றவர் தமிழ்வாணன்.
  வரலாற்று நாவல்கள்
வரலாற்று நாவல்களுக்கும் சமூக நாவல்களுக்கும் சில ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. வரலாற்று நாவல்களில் கதையும், கதை மாந்தர்களும் வரலாற்று நிகழ்ச்சிகளில் இருந்து எடுக்கப் பட்டிருக்கும். வரலாற்று நாவல்களில் வரலாற்று உண்மைகளைப் புள்ளிகளாக ஆங்காங்கே அமைத்து அவற்றைச் சுற்றித் தம் புனைவுகளை இழைகளாக இணைத்து நாவலாக்குகின்றனர்.
வரலாற்றுச் சூழல்கள் இந்நாவல்களில் மையமாக இருக்கும். நிகழ்வுகளும், பாத்திரங்களும் நாவல்களை நடத்திச் செல்வனவாக இருக்கும். உண்மைப் பெயர்களில் கற்பனை நிகழ்வுகளும், வரலாற்று நிகழ்வுகளும் இணைக்கப்பட்டு நாவல்கள் எழுதப்பட்டிருக்கும்.
பழங்கால மக்களின் வாழ்வு முறை, உணவு, உடை, பழக்க வழக்கங்கள் மிக விரிவாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழில் வரலாற்று நாவல்களை எழுதியதில் முன்னோடியாகத் திகழ்பவர் கல்கி. அவரைத் தொடர்ந்து அகிலன், நா.பார்த்தசாரதி, கோவி.மணிசேகரன் போன்றோர் வரலாற்று நாவல்களை எழுதிப் புகழ் பெற்றனர். சாண்டில்யன் தமிழில் மிகுதியான வரலாற்று நாவல்களை எழுதினார்.

No comments:

Post a Comment